நாளை (8.7.2025) இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்கிற மொத்தம் 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடப்போகிறார்கள்.
வங்கிகள் கூட இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று அரசு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. திமுக கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுக தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமை செயலக அதிகாரி முருகானந்தம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்படும் (No Work No Pay அடிப்படையில் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்), அதேபோல துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தகவலை வெளியிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இதனால் நாளை அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.