மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: பாஜக அரசு பதவியேற்றது
கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் அவருடைய மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு இன்று அல்லது நாளை பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் தேவேந்திர பட்நாயக் சற்றுமுன் முதல்வராக பதவியேறார். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தர ஒப்புக்கொண்டதை அடுத்து பாஜக ஆட்சி பதவியேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவேந்திர பட்னவிஸ் அவர்களுக்கு முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்க அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க நேற்று வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேசியவாத காங்கிரஸ், திடீரென பாஜகவிற்கு ஆதரவு அளித்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு ஜனாதிபதி பதவியை தர பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனையடுத்தே பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்த திடீர் அரசியல் திருப்பம் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.