கொரோனா காலகட்டத்தில் இருந்தே இந்த சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் என பலரும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் எவ்வளவு தான் எடுத்துகூறினாலும் ஸ்மார்ட் போன்களுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி. இவர்களுக்கு 16 வயது மகள் இருக்கிறார். அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அது காலப்போக்கில் நட்பாக தொடர்ந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் ஒரு இறப்பு காரணமாக வெளியூர் சென்றுள்ளார்கள். அப்போது அந்த சிறுமி எப்போதும் போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சுனில் உடன் பைக்கில் பர்கூர் மலைக்கு சென்றுள்ளார். அப்போது பயணத்தின் போது விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதித்து இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி படுத்தி விட்டார். இந்த செய்தியை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.