நீட் முறைகேடு: 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்!! மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகாமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
இந்தியாவில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 05 அன்று நாடு முழுவதும் 4,750 மையங்களில் நடத்தப்பட்டது.
சுமார் 24,00,000 மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் கடந்த ஜூன் 04 அன்று இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது.இதில் நாடு முழுவதும் சுமார் 67 மாணவர்கள் 720/720 மதிப்பெண் பெற்றிருந்தனர்.தமிழகத்தில் 4 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.அதேபோல் ஹரியானாவில் 6 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருப்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,மறுத்தேர்வு நடத்த வேண்டும்,கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணையில் நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தி நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.இதை தொடர்ந்து நீட் தேர்வில் ஏதேனும் தவறு நடைபெற்றிருந்தால் ஒப்புக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வழக்கை ஜூலை 08 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.