2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்
படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை
நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ)
சாா்பில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் இந்த ஆண்டு
ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்
தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் செப்டம்பா் 12-ஆம் தேதி கரோனா விதிமுறைகளைப்
பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் தோ்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலால் மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம்
பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.