இது போன்ற கோமாளித்தனத்தை இதுவரையில் பார்த்ததில்லை! பால் விலை உயர்வு தொடர்பாக அண்ணாமலை விலாசல்!

0
149

தமிழக அரசு உயர்த்தி இருக்கின்ற சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாஜக சார்பாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. கட்டுமான பொருட்களின் விலை தொடங்கி சொத்து வரி குடிநீர், மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை என்று அனைத்து கட்டணமும் அதிகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 16 மாத கால திமுக ஆட்சியில் விலைவாசி அதிகரிப்பு மட்டுமே சாதனையாக இருக்கிறது சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மகன் வெளியிட்டுள்ள படத்தை வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வயல்வெளியில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிட்ட ஸ்டாலின் தற்போது முதல்வராகி விட்ட நிலையில், வயல்வெளியில் சிவப்பு கம்பளம் விரித்து மழை சேதத்தை பார்வையிடுகிறார் என்று சாடியுள்ளார் அண்ணாமலை.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்து விட்டு விற்பனை விலையை 12 ரூபாய் அதிகரிப்பது தான் திராவிட மாடல். குஜராத்தின் அமுல் கூட்டுறவு நிறுவனம் தன்னுடைய வருவாயில் 82 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் ஊழல் காரணமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆனால் அமைச்சர் நாசர் நாள் ஒன்றுக்கு 43 லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பொய்யுரைக்கிறார்.

டிலைட் வகை பாலுக்கு மட்டும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது 6 வண்ணங்களில் விற்பனையாகும் பாலுக்கு ஜிஎஸ்டி கிடையாது. கர்நாடகாவில் ஆரஞ்சு கலர் பால் லிட்டர் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது ஆவின் அதே வகை பாலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.

பால் விலை உயர்வு காரணமாக விற்பனை குறைந்து இருக்கிறது என்றதும் அதனை காய்ச்சி, உருக்கி விடுங்கள் பொங்கலுக்கு நெய்யாக விற்று விடலாம் என்று அமைச்சர் தெரிவிக்கிறார். இது போன்ற கோமாளித்தனமான அரசை இதுவரையில் பார்த்ததில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Previous articleரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!
Next articleமறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!