புதிதாக வேலை தேடுபவர்களை விட, வேலை கொடுப்பவர்களை உருவாக்கத்தான் எந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஆன்லைனில் பேசினார். அப்போது அவர் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் சீர்திருத்தத்தை வெளியிட்டதைப் பற்றி பேசினார்.
“இந்த புதிய கல்விக் கொள்கையானது உலகத் தரத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை இருக்க வழிவகை செய்யும் எனவும், இந்தியாவின் கல்விக் கொள்கையானது புதுமையாகவும் மற்றும் நவீனமாகவும் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம் எனவும்,
இந்தக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தவே மறுஆய்வு செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது. மேலும் இதன்மூலம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கும் தேவைக்கேற்பவும், இளைஞர்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த கல்வித் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை விட சிந்தனையின் அடிப்படையிலேயே பாடத்திட்டங்கள் உள்ளன என்றும், மாணவர்கள் தங்கள் தாய் மொழியின் வாயிலாகவே படித்து ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். மேலும் மாணவர்கள் புதிதாக வேலை தேடுபவர்களை உருவாக்காமல் வேலை கொடுப்பவர்கள் ஆகவே உருவாக்க வேண்டும் என்பதுதான் இதன் சாராம்சம்” என அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.