மின்சார மீட்டரை தனியாரிடமிருந்து வாங்கலாம்! மின்வாரியம் அறிவிப்பால் தனியார் நிறுவனங்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் வீடு உள்பட அனைத்து கட்டுமானங்களுக்கும் புதிய மின் இணைப்பு வழங்கும் போது மின்சார வாரியத்தின் சார்பில் மின்சார பயன்பாட்டை கணக்கெடுக்க மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரை வழங்குவதற்கு மின்சார வாரியம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றது. இதற்கான கட்டணத்தை மின் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து மீட்டர் வழங்க தாமதம் ஏற்பட்டால் மின்சார நுகர்வோர் தங்களுக்கு தேவைப்படும் மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்கி கொள்ளலாம். எந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலையில் வாங்கலாம் என்ற விபரங்கள் மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,
ஒரு முனை மின் இணைப்பிற்கான மின் மீட்டரை 670 ரூபாய்க்கு வாங்கலாம்.
இதேபோல் மும்முனை உள்ளிட்ட ஒவ்வொரு வகை மின் மீட்டரின் விலையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
வெளியில் இருந்து மின் மீட்டர் வாங்கிய பின், அந்த விபரத்தை மின் நுகர்வோர் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதை பரிசோதித்து பின் மின் வாரிய ஊழியர்கள் பயன்பாட்டுக்கு பொருத்துவார்கள். இதற்கான கட்டணதொகையை மின்சார பயன்பாட்டு கட்டணத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்று மின்வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.