பழனியில் பயன்பாட்டுக்கு வந்த புது மின் இழுவை இரயில்! மகிழ்ச்சியில் பக்தர்கள்!
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக புதிய மின் இழுவை இரயில் இன்று(ஜனவரி24) முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் மின் இழுவை இரயில் சேவை உள்ள கோயிலாக பழனி இருக்கின்றது. பழனி மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இதில் மின் இழுவை ரயில் சேவையில் 32 பேர் பயணிக்கக் கூடிய வகையில் இரண்டு இரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த இரயிலில் பயணம் செய்வதற்கு சிறப்பு கட்டணமாக 25 ரூபாயும் 10 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
32 பேர் பயணிக்கக் கூடிய மின் இழுவை இரயிலில் பயணிகள் பயணம் செய்வதற்கு 8 நிமிடங்கள் ஆகின்றது. மேலும் 32 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் மின் இழுவை இரயில்கள் இருப்பதால் பக்தர்கள் பயணம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகின்றது. இதையடுத்து கூடுதலாக பக்தர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை இரயிலை பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய மின் இழுவை இரயில் நன்கொடையாளர் மூலமாக கடந்த 2023ம் வருடம் ஜனவரி மாதம் 1.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனி மலைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த புதிய மின் இழுவை இரயில் 72 பேர் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதி மற்றும் டிவி ஆகிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய மின் இழுவை ரயில் செல்வதற்கு வசதியாக நடைமேடைகளும் மாற்றப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல் மின் இழுவை இரயிலை இழுக்கும் எந்திரத்தில் அதிக எந்திரம் கொண்ட ஷாப்ட் எந்திரம் பொருத்தப்பட்டது.
இதையடுத்து பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் பஞ்சாமிர்த டின்களை அடுக்கி இந்த மின் இழுவை இரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை ஐஐடி குழுவினர் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் ஐஐடி குழுவினர் புதிய மின் இழுவை இரயிலுக்கு ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய மின் இழுவை இரயில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக இன்று(ஜனவரி24) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய மின் இழுவை இரயில் சேவை தொடங்குவதற்கு முன்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த புதிய நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை இரயிலின் சேவையை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய மின் இழுவை இரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், சுப்ரமணி, ராஜசேகரன், மணிமாறன், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பழனியில் 3வது மின் இழுவை இரயில் தொடங்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.