கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!

கடலூரில் புதிய சுரங்கவியல் ஆராய்ச்சிஆய்வகம்!! என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மூலம் தொடக்கம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் சுரங்கவியல் பட்டய படிப்பை நடத்தி வருகிறது, இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புல வளாகத்தில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர் திறன் உபகரணங்களை கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொறியியல் புல முதல்வர் ஏ.முருகப்பன் தலைமை வகித்து பேசினார். விழாவில் சுரங்கவியல் படிப்பு இயக்குநர் பேராசிரியர் சி.ஜி.சரவணன் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில் சுரங்கவியல் பட்டய படிப்பில் மொத்தம் 60 பேர் பயிலுக்கின்றனர். 30 பேர் பொது அனுமதி சேர்க்கை செய்யப்படுகின்றனர். இதில் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேருக்கு முன்னுரிமையில் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு கல்வி கட்டணத்தை என்எல்சி நிறுவனம் செலுத்துகிறது. 3 ஆண்டுகள் படிப்பு முடிந்தவுடன் என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

விழாவில் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி சுரங்கவியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: உலகத்திலேயே பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்திற்கு முதன் முறையாக வருகிறேன். அதிகளவில் ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். அண்ணாமலைப் பல்கலைக்கும், என்எல்சி நிறுவனத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு, என்எல்சி நிறுவனத்தை பல்வேறு பதவிகளில் பணிபுரியும் 13 ஆயிரம் பேர் இந்த பல்கலையில் பயின்றவர்கள். சுரங்கவியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்எல்சி நிறுவனமும், அண்ணாமலைப் பல்கலை பொறியியல் புலமும் இணைந்து விரைவில் சுரங்கவியல் பட்டப்படிப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்ததுரையாற்றினார். அவர் பேசியது: தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை 4 மாவட்டங்கள் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாவட்டங்களாக திகழ்கிறது. இந்த பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் 90 ஆண்டுகளுக்கு முன்பு 200 கிலோ மீட்டர் கடந்து வந்து கல்விக்காக நிறுவனத்தை தொடங்கினார்.

தமிழகத்தில் 3 வது சிறந்த பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. அண்ணாமலைப்பல்கலைக்கழகம் உயர்கல்வியில் மூன்று முக்கிய கொள்கையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. ஒன்று பல்கலைக்கழக வளாக தேர்வாகிறது, அதில் தொழிற்கல்வியில் இடம் பெறுகின்றனர். இரண்டாவது கொள்கை கல்விஅனைவருக்கும் செல்ல வேண்டும். மூன்றாவது தரம் மற்றும் சிறப்பான கல்வியை அளிப்பதாகும். பல்கலைக்கழகத்தில் மொத்த மாணவர்களில் ஆண்டிற்கு 41 சதவீதம் பேர் எஸ்சி,எஸ்டி பிரிவு மாணவர்களும், மொத்தம் 51 சதவீதம் பெண்களும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

விழாவில் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் ஹெச்.பாக்கியராஜ், மக்கள்-தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நிகழ்ச்சியை இணைப் பேராசிரியர் ப.சிவராஜ் தொகுத்து வழங்கினார். துணை இயக்குநர் எஸ்.மணிகண்டன் நன்றி கூறினார்.