புதிய வடிவத்தில் பாராளுமன்றக் கட்டிடம் : வெளியானது மாதிரிப்படம் !
புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டிவரும் வேளையில் அதன் மாதிரிப் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மோடி தலைமையிலான அரசு புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் கட்ட ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆண்டுக்குள்ளாகவே அதை முடிக்க மோடி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
தற்போது இது சம்மந்தமாக அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் முக்கோண வடிவத்தில் கட்டுவதற்கான மாதிரி வரைப்படத்தை தயார் செய்துள்ளது.தற்போதைய பாராளுமன்றக் கட்டிடம் வட்ட வடிவிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாகக் கட்டப்படும் கட்டிடம் தற்போது பாராளுமன்றம் அமைந்துள்ள வளாகத்துக்குள்ளாகவே அமையும் எனத் தெரிகிறது. இதில் 1,350 பேர் உட்காரும் அளவுக்கான இருக்கை வசதியோடு அமைக்க படுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது 543 எம்.பி.கள் இருக்கும் மக்களவையில் அடுத்த தேர்தலின் போது 848 எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். அதனால் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.. அதனால் மத்திய அரசு மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.