சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுகவின் சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்ற அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கடந்த மூன்று மாதங்களாக எதிர் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அடுத்த விசாரணையின்போது வாதங்களை ஆரம்பிக்காவிட்டால் மனுவின் தன்மைக்கு ஏற்றவாறு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடுவில் பிரேமலதா என்ற வாக்காளர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு எதிரான வழக்குகள் தொடர்பான தவறான தகவல்களை கூறியிருப்பதாக தெரிவித்து அவருடைய வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டிருக்கிறார்.
அத்துடன் பல்வேறு தேர்தல் வழக்குகளில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருக்கின்ற அந்தந்த தேர்தல் அலுவலர்களை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க தெரிவித்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.
உதயநிதி அவர்களை அமைச்சராக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், நீதிமன்றம் இவ்வாறு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

