சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஆறு நாட்கள் தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது தெரிந்ததே. இந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போல் ஒவ்வொரு சீட்டின் பின்புறத்திலும் தொலைக்காட்சி இருந்ததால் பயணிகள் பொழுதுபோக்குக்கு உதவியாக இருந்தது. ஆனால் இந்த தொலைக்காட்சி சரியாக செயல்படவில்லை என்ற புகார் வந்ததையடுத்து தற்போது பயணிகள் பொழுதுபோக்கிற்கு என வைஃபை வசதியை தேஜஸ் ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன்மூலம் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பில் வைபை வசதியுடன் கூடிய மேஜிக் என்ற ஆப் மூலம் திரைப்படங்களை பார்த்து மகிழலாம். இந்த செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் இலவசமாக வைபை வசதி கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஆகியவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
பயணிகள் தங்களுடைய பயணத்தில் 500 மணி நேரம் தொடர்ச்சியாக வைபையை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி தங்கள் பயணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யலாம் என்றும் தேஜஸ் ரயில் அறிவித்துள்ளது இந்த புதிய அறிவிப்பு தேஜஸ் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.