தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்

Photo of author

By Anand

தேர்தல் நேரத்தில் பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வெளியூர் செல்வதால் அவர்கள் சார்ந்த தொகுதியில் வாக்களிக்க முடியாமல் போகிறது. இதனை சமாளிக்கும் விதமாக எங்கிருந்தாலும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இணையவழி பயிலரங்கை நடத்தியுள்ளது.

தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் 2020 ஆகஸ்ட் 10 ஆம் தேதி இணையவழிப் பயிலரங்கினை நடத்தியது. இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த  தொழில்நுட்ப நிபுணர்கள், கல்வி நிபுணர்கள், கொள்கைச் செயலாக்கம் செய்வோர், இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர். 2019 அக்டோபர் 30 ஆம் தேதி  இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் திரு.சுனில் அரோரா சென்னை ஐ.ஐ.டி.க்கு வருகை தந்தபோது, பிளாக்செயின் முறையைப் பயன்படுத்தி வாக்களிப்பது குறித்த யோசனையை கூறினார்.

இந்த இணையவழி பயிலரங்கில் தேர்தல் ஆணையாளர் திரு சுஷீல் சந்திரா  சிறப்புரை ஆற்றினார். “தேர்தல்களில் பங்கேற்புநிலை” அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பூகோள ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக பலரால் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் போகிறது என்று அவர் குறிப்பிட்டார். பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வாக்களிக்க முடியாமல் போகிறது. வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தபோது இருந்த இடத்தில் இருந்து வாக்காளர் குடிபெயர்ந்தாலும் இந்த நிலை ஏற்படுகிறது. அதற்கு ஏற்ற ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கும்போது, “தொடர்புடைய அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக, தேர்தல் நடைமுறை மற்றும் ரகசியத் தன்மையின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாக, வாக்குப் பதிவில் தவறு நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இந்தத் தொழில்நுட்ப உத்தரவாதமானது, முறைகேடு செய்ய வாய்ப்பில்லாதது என்ற நம்பிக்கையை அரசியல் கட்சிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர். தற்போது வாக்குச் சாவடிகள் குறிப்பிட்ட இடத்தை மையமாகக் கொண்டிருக்கின்றன. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் நடைமுறை இதில் இருந்து மாறுபட்டிருக்கும். இருந்தபோதிலும், வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை உருவாக்கும் உத்தேசம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். தங்களுடைய வாக்குச் சாவடியில் இருந்து தொலைதூரத்தில் வசிப்பவர்கள், பாதுகாப்பான முறையில் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்கான தொழில்நுட்பமாக இது இருக்கும் என்று அவர் கூறினார். நிபுணர்கள் மத்தியில் இதுகுறித்து விவாதம் நடத்தினால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அதிக பங்கேற்புடன் கூடிய தொலைதூர வாக்களிப்பு நடைமுறையை உருவாக்கி, மக்கள் கையில் அதிகாரம் கிடைக்கச் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

உலகெங்கும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் இந்த இணையவழிப் பயிலரங்கில் பங்கேற்றனர்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உலக அளவில் கிடைத்துள்ள அனுபவங்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அளவீடு செய்தல், தகவல் ரகசியத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை, தகவல் பாதுகாப்பு, அங்கீகாரம் அளித்தல் மற்றும் சரி பார்த்தல் போன்ற அம்சங்களில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி இதில் விவாதங்கள் நடைபெற்றன.