புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது! சுகாதார அமைச்சகம் தகவல்!!
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வந்தது. மேலும் பலக்கட்ட உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் திறனையும் மாற்றியமைத்துக்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ஆல்பா என்றும், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு டெல்டா என்றும் பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ்க்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இஸ்ரேலில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் இரண்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸின் இந்த புதிய வகை மாறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், கொரோனாவின் இந்த புதிய மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் கண்டறியப்படவில்லை என்றும் இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.