அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

Photo of author

By Anand

அடுத்த தமிழக பாஜக தலைவர் இவரா? இதற்கு தான் இந்த தாமதமா?

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சில மணி நேரங்களில் அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது பாஜக தலைவர் பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சரியாக 11 நாட்கள் முடிந்த நிலையிலும் இன்னமும் தமிழக பாஜக தலைவர் யார் என்பது பற்றி அக்கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் யாரென்று அறிவிக்க ஆகும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

தேசிய தலைமை ஏற்படுத்திய இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி தமிழக பாஜக தரப்பிலிருந்து இன்னமும் சிலர் அந்த பதவியை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வருகிறது. அதை ஒட்டி பாஜக சார்பில் செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை சேவை வாரமாக பாஜகவால் அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து மாநில பாஜக நிர்வாகங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திற்கான பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளதால், சேவை வாரம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளை மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக உள்ள கேசவ வினாயகம் முன்னின்று நடத்துகிறார்.

பொதுவாகவே பாஜகவில் அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஆர்எஸ்எஸ்சின் தீவிர ஊழியர் தான் இருப்பார். மாநில அளவில் பாஜகவுக்கு தலைவர் என இருந்தாலும் இந்த அமைப்புப் பொதுச் செயலாளரின் ஆலோசனையும் பங்கும் கட்சி நிர்வாகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இப்போது பாஜக மாநிலப் பொறுப்புகளை கேசவ வினாயகம் என்பவர் தான் பார்த்து வருகிறார்.

அதே நேரம் தமிழக பாஜக தலைவர் பதவி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தைப் பயன்படுத்தி மேலும் சிலர் அந்த பதவியை பிடிக்க டெல்லியில் உள்ள தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் நயினார் நாகேந்திரன், நரேந்திரன் ஆகியோர் மிக வேகமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு இந்த பதவியை யாருக்கு வழங்க போகிறார்கள் என்று குறிப்பிடும் வகையில் தமிழக பாஜகவினருக்கு நேற்று இன்னொரு சிக்னல் காட்டப்பட்டிருக்கிறது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் காவேரி கூக்குரல் என்ற பயணத்தை கர்நாடகா முதல் தமிழகம் வரை நடத்துகிறார். நேற்று அவரது பயணம், தமிழகத்தில் தொடங்கியது. இதற்காக தமிழக எல்லையான ஓசூர் அதியமான் கல்லூரியில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.பி.யுமான செல்லகுமார் கலந்து கொண்டிருக்கிறார். அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்து கொண்டார். பாஜக சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று ஈஷா சார்பில் பாஜக தலைமையிடமும் கேட்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு யாரை பாஜக மேலிடம் பிரதிநிதியாக அனுப்புமோ என்று எதிர்பார்ப்பு மிகுந்திருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராகலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருபவர்களில் ஒருவரான தேசிய இளைஞரணித் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தத்தையே காவேரி கூக்குரல் நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக பிரதிநிதியாக அனுப்பி வைத்திருக்கிறது பாஜகவின் தேசிய தலைமை. இதுவே அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதற்கான ஒரு சிக்னல் தான் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருவதற்குள் தமிழக பாஜக தலைவரை நியமித்து தமிழகத்தில் மோடி பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பது அக்கட்சியின் திட்டம் என்கிறார்கள். ஏன் தாமதம் என்று விசாரிக்கையில் ஏ.பி.முருகானந்தம் பெயர் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், அவர் தற்போது வகித்து வரும் தேசிய இளைஞரணி துணைத் தலைவர், தேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகிய முக்கியமான பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்ற ஆலோசனை டெல்லியில் நடந்து கொண்டிருப்பதாகவும் அதனாலேயே அறிவிப்பதில் இந்த தாமதம் என்று பாஜகவின் ஒரு தரப்பு நிர்வாகிகள் சொல்கிறார்கள். ஆனாலும் இந்தத் தாமதத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி தலைவர் பதவிக்கான ரேஸில் இன்னும் சிலர் கடைசி வரை நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்