வழக்கமாக தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை சுமார் 4 மாதங்கள் வரை நீடிக்கும்.
இந்த காலகட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். தமிழகத்தை பொருத்த வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை இருக்கும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 5ம்தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனிடையே அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருந்ததால், ஜூன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் மாற்றம் செய்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையின் அறிகுறியாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்யத் துவங்கியது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கோடை வெப்பத்தால் தகித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கிழக்கு-மத்திய அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது.
இது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. லட்சத்தீவு அருகே உருவாக உள்ள புதிய புயலுக்கு ‘நிசர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிசர்கா மும்பை கடற்கரைக்கு மிக அருகில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் நிசர்கா செவ்வாய்க்கிழமை காலை வரை வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் பயணித்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளை ஹரிஹரேஷ்வர் (ராய்காட், மகாராஷ்டிரா) மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் இடையே புதன்கிழமை மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 105 முதல் 115 கி.மீ (கி.மீ) 125 கி.மீ வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கன், கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் வியாழக்கிழமை வரை மிகவும் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.