மீண்டும் ஆரம்பித்த நிபா வைரஸ்! பலியான 12 வயது சிறுவன்! குடும்பத்தின் நிலை என்ன?
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம் பதினேழு பேர் மரணமடைந்துள்ளனர். நிபா வைரஸ் நோயானது பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகின்றது என்று அறிவியலாளர்கள் கூறியதன் காரணமாக, அந்த பழங்களை சாப்பிடக் கூடாது எனவும், பலாப்பழம், கொய்யா பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதே போல வௌவாலின் கழிவுகளில் இருந்து தான் நிபா வைரஸ் பரவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது தான் கொரோனாவின் தாக்கம் மற்றும் தொற்று பரவும் விகிதமும், கொஞ்சம் அடங்கி உள்ளது. ஆனால் கேரளாவில் இன்னும் இரண்டாம் அலை கட்டுக்குள் வரவில்லை. மாநிலங்களிலேயே அதிகம் பாதிக்கப்பட்டது கேரள மாநிலமாக உள்ளது.
ஆனால், தற்போது அங்கு மீண்டும் சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சூலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஒன்றாம் தேதி உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனையில் உறுதியும் செய்துள்ளனர்.
இதையடுத்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். நிபா வைரசின் தன்மை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது என்பதனால், சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்து வலி, தலை சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்சனை, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகின்றது. இன்று வரை நிபா வைரஸுக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.