கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டை திமுக கடந்த 4 வருடங்களாக சொல்லி வருகிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை. இதனால், தேர்தலில் போட்டியிட்டு அவர்களால் வெல்ல முடியவில்லை. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் அதிக அளவிலான ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால், பாஜக அரசு நிதியை தர மறுக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்தார்.
அதிலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்தின் கல்வி நிதியை கொடுப்போம் என மத்திய கல்வி அமைச்சர் சொன்னது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு, தமிழக எம்.பி.க்கள் மோசமானவர்கள் என அவர் பாராளுமன்றத்தில் பேச கடுமையான எதிர்ப்பை சந்தித்து பின் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த ஒருவிழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். அதில் ரூ.1-க்கு இவ்வளவு தருகிறீர்கள்’ என இங்கே சிலர் வாதம் செய்கிறார்கள். இந்த கணக்கு எங்கிருந்து வருகிறது என எனக்கு புரியவில்லை. இவ்வளவு பணம் கொடுக்கிறோம். நீங்கள் என்ன தருகிறீர்கள் என்ற இவர்களின் ஜனரஞ்சகமான வாதமே தவறு. இவர்கள் மிகவும் குதர்க்கமாக பேசுகிறார்கள்.
ஏளனமாக சொல்ல வேண்டும் எனில் சென்னை, கோவை மக்கள்தான் தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்துகிறார்கள். அரியலூர் போன்ற குறைவான வரி செலுத்தும் மாவட்டங்கள் ‘எங்களுக்கு சென்ன செய்கிறீர்கள்?’ என கேட்கும்போது, சென்னை மக்கள் ‘நாங்கள்தான் அதிக வரி கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு உதவ வேண்டாம்’ என சொல்வது போல இருக்கிறது. ஆனால், அரசுக்கு அப்படியொரு திட்டமோ கொள்கையோ இல்லை’ என பேசியிருக்கிறார்.