நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்எல்சி நிர்வாகம்!

Photo of author

By Savitha

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்.எல்.சி நிர்வாகம்! 
கடலூர் மாவட்டத்தில் மீண்டும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு அதிமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்த்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இதையடுத்து நிலக்கரி சுரங்கத்திற்காக கோரப்பட்டிருந்த டெண்டர் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில்  உழவர்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி விட்டதாகக் கூறி, அவற்றில் இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் இன்று ஈடுபட்டது. என்.எல்.சியின் அத்துமீறலுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் இயந்திரங்களுடன் அதிகாரிகளையும் கிராம மக்கள் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
என்.எல்.சி நிறுவனத்தின் இந்த  அத்துமீறலுக்கு  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை  அரசும், என்.என்.சி நிறுவனமும் கைவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால்  பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை  பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.