ஆர்ப்பரிக்கும் கடலின் முன் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கும் அன்னை அவள் முத்தாரம்மன் தேவி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஞானமூர்த்தீசுவரர் சமேதய ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். மைசூர் தசராவிற்கு அடுத்து பேர் போனது குலசை தசரா. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசிதி பெற்றது ஸ்ரீ முத்தாரம்மன் தசரா திருவிழா.
தசராவிற்கு பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பல்வேறு வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை முத்தராமனுக்கு காணிக்கையாக செலுத்துவர்.
தசராவின் போது அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இந்த வருடத்திற்கான தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் திருவிழாவின் இன்று நள்ளிரவு அம்மன் சூரசம்ஹாரம் நடத்தவிருக்கிறாள்.
ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் புடை சூழ கடற்கரையில் சூரசம்ஹாரம் ஆர்பரிப்புடன் நடைபெறும். கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் இன்றி மிகவும் எளிமையாக நடைபெற்றது. இந்த வருடம் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம், அதன் பிறகு பக்தர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை. சூரசம்ஹாரம் கோவிலின் முன்பு மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது.