இனி அதிரடி சரவெடி! 2 கோடி உறுப்பினர்களை களமிறக்க காத்திருக்கும் தவெக!
தனக்குத் தெரியாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமனம் செய்யக்கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி பணியாற்றுவதை பொருத்து பொறுப்புகள் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள விஜய் ரசிகர்களை நிர்வாகிகளாக சேர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இரண்டு தொகுதிகளை ஒரு மாவட்டமாக அமைத்து நிர்வாகிகளின் நியமனம் மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக தலைமை நிலையச் செயலகம் அறிவித்துள்ள அறிக்கையில், ”தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் தயாரிக்கும் போதும் பயன்படுத்தும்போதும் கட்சி தலைமையால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கழகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்படும்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படும்.
தமிழக வெற்றி கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படும் சிறப்பு செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட மாநகர நகர பேரூர் ஒன்றிய ஊராட்சி வார்டு வாரியாக, முழு வீச்சில் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதன்படி இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் முதற்கட்ட பணியாகும்.
புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சட்டமன்ற தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.