2 வருடத்திற்கு 2 படங்கள் என்று போய் இப்பொழுதெல்லாம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியியாவதே மிகவும் அதிசயமாக தான் இருக்கிறது.
ஆனால் அன்றைய நாளில் ஒரு வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து ஒரு வருடத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு ஒரு முறை மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனையை படைத்துள்ளார் சிவாஜி அவர்கள்.
அந்த கால கட்டத்தைப் போல தொழில்நுட்பம் அதிகமாக இல்லாவிடினும் மக்கள் படங்களை ரசித்தனர். படங்களை மட்டும் இல்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களை தங்கள் வீட்டு மக்களாகவே நினைத்து அதை பார்த்தனர். அதேபோல் மக்களுக்காக சேவை செய்ய வந்த கலைஞர்கள் நாங்கள் என்று நடிகர்களும் தங்களின் பங்களிப்பை நல்வண்ணமே தந்தனர்.
அதில் சிவாஜி மாறுபட்டவர் மக்களுக்காக நடிப்பை உயிராகவே கொடுப்பேன் என்று எண்ணிக்கொண்டு நடித்தவர். அப்படி அவ்வளவு படங்களில் கமிட் ஆகி 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். அவர் நடித்துள்ளார் என்பதை சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.
சிவராத்திரி படத்தை பார்த்து விட்ட பிரெஞ்சுக்காரர்கள் யார் இந்த மனிதன்? இப்படி நடித்திருக்கவே முடியாது! அப்படி நடித்திருந்தால் என்றால் அவன் மனிதன் அல்ல தெய்வம் என்று சொல்லும் அளவிற்கு அந்த படம் அவ்வளவு பேசப்பட்டது.
நடிப்புக்காக, கலைத்துறைக்காகவே தனது வாழ்வை வாழ்ந்து வந்தவர் சிவாஜியவர்கள். அவரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் கொடை வழங்குவதில் அவர் வல்லவர்.
முதல் முறையாக சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த படங்களை ஒரே நாளில் வெளியான வெவ்வேறு படங்கள் என்று கூற முடியாது என்றாலும் மூன்று மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த ‘தூக்கு தூக்கி’ மற்றும் எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டுமே சிவாஜி கணேசனுக்கு மறக்க முடியாத படங்களாக அமைந்தன.
1955ஆம் ஆண்டு ‘கோடீஸ்வரன்’, ‘கள்வனின் காதலி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது
1956ஆம் ஆண்டு ‘நான் பெற்ற செல்வம்’ மற்றும் ‘நல்ல வீடு’ ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வந்தது. இதில் ‘நான் பெற்ற செல்வம்’ வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 1959ஆம் ஆண்டு ‘அவள் யார்’, ‘பாகப்பிரிவினை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1960ஆம் ஆண்டு ‘பாவை விளக்கு’, ‘பெற்ற மனம்’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின.
1961ஆம் ஆண்டு ‘எல்லாம் உனக்காக’, ‘ஸ்ரீ வள்ளி’ ஆகிய திரைப்படங்களும், 1964ஆம் ஆண்டு ‘நவராத்திரி’ மற்றும் ‘முரடன் முத்து’ ஆகிய திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இதில் ‘நவராத்திரி’, ‘முரடன் முத்து’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.
1967ஆம் ஆண்டு தீபாவளி அன்று சிவாஜி கணேசன் நடித்த ‘ஊட்டி வரை உறவு’, ‘இரு மலர்கள்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஒன்று வண்ண படம், இன்னொன்று கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் இரண்டு படங்களுமே 100 நாள் ஓடி சாதனை செய்தது.
1970ஆம் ஆண்டு ‘விளையாட்டு பிள்ளை’ மற்றும் ‘தர்தி’’ என்ற ஹிந்தி படம் ஒரே நாளில் வெளியானது. அதே ஆண்டில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ மற்றும் ‘சொர்க்கம்’ ஆகிய படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்தது.
1971ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘சுமதி என் சுந்தரி’ மற்றும் ‘பிராப்தம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியான. இதில் ‘பிராப்தம்’ திரைப்படம் சாவித்திரியின் சொந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 1975ஆம் ஆண்டு ‘வைரநெஞ்சம்’, ‘டாக்டர் சிவா’ ஆகிய படங்களும், 1982ஆம் ஆண்டு ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘ஊரும் உறவு’ ஆகிய படங்களும் ஒரே நாளில் வெளியானது.
1984ஆம் ஆண்டு ‘இரு மேதைகள்’ மற்றும் ‘தாவணி கனவுகள்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. அதேபோல் 1987ஆம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு’ மற்றும் ‘கிருஷ்ணன் வந்தான்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, 17 முறை ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு சாதனை செய்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.