இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!!
வங்காளத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் காயம் காரணமாக கேப்டன்
ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வங்காளத்திடம் இழந்தது. இதனையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்க்சில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி.
வங்காளம் சார்பில் மெஹிதி, இஸ்லாம் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அடுத்து ஆடிய
வங்காளதேசம் இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 55.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணி கில்,புஜாரா சதத்துடன் 258 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய வங்காளம் 4-ஆம் ஆட்ட முடிவில் 272 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி கொண்டு இருந்தது.நேற்று கடைசி நாளில் வங்காளத்துக்கு வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் தொடங்கிய ஒருமணி நேரத்தில் வங்காளத்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
இதனால் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை
வகிக்கிறது.
இந்த போட்டியில் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன்
ரோகித் சர்மா விளையாடவில்லை.கே.எல்.ராகுல் தான் இந்திய அணிக்கு பொறுப்பு வகித்தார்.
எனவே டாக்காவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாடுவார்
என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாத
காரணத்தினால் அவர் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் ராகுலே வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.