தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

Photo of author

By CineDesk

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

இலங்கையில் இனி தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றும் தமிழில் இசைக்கப்படாது என்றும் இலங்கை அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளது அங்குள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் என்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அங்குள்ள சிங்களவர்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்சே அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லாமல் தமிழர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு வருவதை தமிழர்கள் அதிர்ச்சியுடன் நோக்கி வரும் நிலையில் தற்போது தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது என்று கூறியிருப்பது ஒட்டுமொத்தமாக தமிழர்களை ஒதுக்குவதுதான் இலங்கை அரசின் எண்ணமாக இருப்பதாக தமிழ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை வைத்து அரசியல் செய்து வரும் தமிழக அரசியல்வாதிகள் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த கண்டன குரலால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.