தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

Photo of author

By Mithra

தடுப்பூசி தட்டுப்பாடுலாம் இல்லைங்க! இயலாமையை மறைக்க முயற்சிக்கிறாங்க! நடுவண் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பகலிலும் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் 21 – 40 வயதிற்கு உட்பட்ட 30.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது 38% என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதால், 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்க வேண்டும் என்றும், ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு கோடியே 6 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், அதில் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு 40 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்படுவதால், தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த 3 நாட்கள் மட்டுமே வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், கூடுதலாக தடுப்பூசிகளை நடுவண் அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என குறிப்பிட்டுள்ளார். இது, நோய்த்தொற்று பரவலைத் தடுக்க முடியாமல் தோல்வியடைந்ததை மறைப்பதற்காகவும், மக்களை திசைதிருப்பி பீதியடைய வைக்கவும் செய்யப்படும் முயற்சி என சாடியுள்ளார்.

தடுப்பூசி இருப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாநில அரசுகள் அதனை தங்களுக்கு அனுப்பி வருவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அம்மாநில அரசு சரிவர செய்யவில்லை என்ற அவர், தனிமைப்படுத்தும் நடுவங்களில் தொற்று பாதித்தவர்களை வைக்காமல் வெளியேற விட்டு மகாராஷ்டிராவை ஆபத்தில் தள்ளி விட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.