தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். இது வழக்கமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகும். இந்த சூழ்நிலையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 28 தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நேற்றைய தினமே பருவ மழை தொடங்கி இருக்கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கும்போது, தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை கேரளா, உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகாவில் நேற்றைய தினம் முதல் ஆரம்பம் ஆகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மழை பெய்து இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் கனமழை பதிவாகி இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அனேக பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கன மழையை பொருத்தவரையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பொருத்தவரையில் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்களுக்கு எந்த விதமான எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1 முதல் நேற்றைய தினம் வரையில் தமிழகத்தில் 18 சென்டி மீட்டர் வரையில் மழை பெய்திருக்கிறது. இயல்பை விட 33 சதவீதம் அதிகம் என தெரிவித்திருக்கிறார் புவியரசன். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.