நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலகி வரும் நிலையில், தமிழகம் உள்பட சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் அதிகம் மழையை பெறுவது இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக விலக தொடங்கியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் (17-ந் தேதிக்குள்) முற்றிலும் விலகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் (17-ந் தேதிக்குள்) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, உள் கர்நாடகா, ராயல்சீமா மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. பெரும்பாலும் தமிழகத்தில் 17-ந் தேதி (நாளை) பருவமழை தொடங்கிவிடும்.
இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் (இன்றும், நாளையும்) தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய தென் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வருகிற 17, 18-ந்தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரையில் சூறைக்காற்று வீசக்கூடும். இதன் காரணமாக மேற்கூறிய பகுதிகளுக்கு, 17, 18-ந் தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-
ஸ்ரீவைகுண்டம் 8 செ.மீ., தூத்துக்குடி, தொண்டியில் தலா 7 செ.மீ., கோத்தகிரி 6 செ.மீ., கெட்டி 5 செ.மீ., செம்பரம்பாக்கம், அம்பாசமுத்திரம், பூந்தமல்லி, குன்னூர், கன்னியாகுமரியில் தலா 4 செ.மீ., அரவக்குறிச்சி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை, பொள்ளாச்சி, சிவகிரி, சோழவரம், தென்காசி, மணிமுத்தாறு, ஆர்.எஸ்.மங்களம், நாகர்கோவில், தாம்பரம், மணியாச்சி, ராயக்கோட்டை, ஓட்டப்பிடாரம், பெருந்துறை, ராதாபுரத்தில் தலா 3 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.