தமிழகத்தை வெளுத்து கட்டும் வடகிழக்கு பருவமழை!! இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கிய பருவமழையால் விவசாயம் செய்ய போதிய நீர் இல்லை என்று வருந்திய விவசாயிகளை கலங்கடிக்கும் விதமாக தொடர்ந்து கொட்டி தீர்த்து விவசாய பயிர்களை மூழ்கடித்து வருகிறது.
தமிழகத்தின் ஆறு, ஏரி, அணை உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்து இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையை கடந்த வாரம் பருவமழையோடு புயல் மழையும் சேர்ந்து ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.