1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!
தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை.
அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வரிசையில் மற்றொரு கிராமமும் இணைந்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டம் அருகே சித்தூரணி மற்றும் கல்லூரணி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 1 மணி வரை இந்த வாக்குச்சாவடியில் வெறும் 7 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதுவும் அருகில் உள்ள கிராம மக்களின் வாக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தூரணி மற்றும் கல்லூரணி பகுதியில் உள்ள பாசன கால்வாயில் மருத்துவ மற்றும் வீட்டுக் கழிவுகள் கழிப்பதால், கால்வாய் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி கோரியும் இதுவரை எந்தவித வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எனவும் புகாரளித்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் யாருமே வாக்களிக்கவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த எம்.எல்.ஏ., மற்றும் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு எங்களில் குறைகளை எல்லாம் சரிசெய்து கொடுத்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்போம். இல்லை என்றால் இனி எப்போதும் வாக்களிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.