Seeman: தன்னை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தம்பி என அழைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான். அடிப்படையில் சினிமா கதாசிரியர், இயக்குனர் என்பதால் நன்றாகவே கதை சொல்வார். இவர் சொல்லும் பல கற்பனை கதைகளை நிஜமென நம்பிய இளைஞர்கள் இவரின் தம்பிகளாக மாறிவிட்டனர். அரசியல் மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி கவனம் ஈர்ப்பார். சீமான் பேசுவதை கேட்டால் தம்பிகளுக்கு நரம்புகள் புடைக்கும்.
‘ஒருநாள் இந்த நிலம் என்கிட்ட சிக்குச்சி’ என சீமான் கர்ஜித்தால் தம்பிகளுக்கு கூஸ் பம்ப்ஸ் ஃபீலிங் வரும். திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக – திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை நாம் வாங்கி விடுவோம் என்கிற நம்பிக்கையில்தான் கட்சி துவங்கினார் சீமான். 2 சதவீதம் வாங்கிய கட்சி இப்போது 8 சதவீதம் வரை வந்துவிட்டது. அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவது சீமானின் வழக்கம். சமீபத்தில் கூட பெரியாரை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.
ஒருபக்கம் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகாரை கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னை கர்ப்பமாக்கி பின்னர் அதை கலைக்க சொன்னதாகவும் புகார் கொடுத்தார். இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த சீமான் ஒரு கட்டத்தில் ‘அவள் விருப்பப்பட்டு வந்தாள். அவள் ஒரு பாலியல் தொழிலாளி.. நான் என்ன ரேப்பா செய்தேன்?’ எனக்கேட்டு அதிர வைத்தார்.
அதிமுக – திமுக எதிர்ப்புகள் நமக்கு வரும் என்ற நம்பிக்கையில் சீமான் இருக்கும்போதுதான் விஜய் தனியாக கட்சி துவங்கி அதற்கு ஆப்பு வைத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சீமான் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில், சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமானை சந்தித்து பேசியிருக்கிறார் சீமான். கண்டிப்பாக சீமானை பாஜகவே சந்திக்க விரும்பியிருக்கும் என கணிக்கப்படுகிறது.
ஏனெனில், அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக போன்ற திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இப்போது சீமானையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. எப்போதும் தனியாகவே தேர்தலை சந்திப்பேன் என சொல்லும் சீமான் இந்தமுறை பாஜக கூட்டணியில் இணைவரா என்பது தெரியவில்லை.
சீமான் தனியாக போட்டியிட வேண்டுமா? இல்லை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமா?.. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்!…