National

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அவர்களுக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைதட்டி அவரை வரவேற்றனர். 

இன்று மக்களவையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் பதவியேற்றனர். அப்போது 38 எம்பிக்களும் தமிழில் உரையாற்றி பதவியேற்றனர். இவர்களது பதவியேற்பு உரையின் இறுதியில் திமுக கூட்டணியை சேர்ந்த எம்.பிகள் ‘’வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்றும் முழக்கமிட்டனர். இது போலவே பெரியார் வாழ்க என்று பலரும் தளபதி வாழ்க என்று சிலரும் உரையாற்றினர். அப்போது பாரத் மாதாகி ஜே என முழக்கமிட்டு ஒவ்வொருவருக்கும் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி உரையின் போது இறுதியில் பெரியார் வாழ்க எனக் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டு பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான தேனி தொகுதி எம்பியான ஓ பி எஸ் மகன் ஓ.பி.ரவிந்தரநாத் குமார் பதவியேற்றார். அவர் பதவியேற்ற போது அவரின் பதவி பிரமாணத்தின் இறுதியில், “வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என மட்டும் கூறினார். ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பெயரையும், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கூறுவதை தவிர்த்து விட்டு வந்தேமாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். இதனால், பாஜக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி ஆரவாரமாக உற்சாகப்படுத்தி வாழ்த்தினர்.

திமுக கூட்டணியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருந்தாலும் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறிவிட்டனர். ஆனால் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் தனி ஒருவனாக பாஜக ஆதரவுடன் கெத்தாக பதவியேற்று தனக்கு பின்னால் பாஜக உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.

Leave a Comment