இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு
மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் உள்ள புதிய இணைப்புகளை ஆய்வு செய்வது மற்றும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில் தவறுகள் இருந்தால் திருத்துவதற்குப் பரிந்துரைப்பது”.
பயன்:
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மத்தியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதுள்ள இடஒதுக்கீட்டின்படி மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் பயன்பெற இயலாதவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
பின்னணி:
அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆணையம் 2017 அக்டோபர் 2 அன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. ஜி.ரோகிணி தலைமையிலான இந்த ஆணையம் 2017 அக்டோபர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளைக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்கள் ஆகியவற்றுடன் இது ஆலோசனை நடத்தியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதைய மத்திய பட்டியலில் காணப்படும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில் தவறுகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் தனது அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என ஆணையம் கருதியது. எனவே தனது பதவிக்காலத்தை 6 மாதத்திற்கு நீடிக்கவும், தற்போதுள்ள விசாரணை வரம்பை கூடுதலாக்கவும் கோரியது.