ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்!
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்பினை இன்ச் டேப் கொண்டு அதிகாரிகள் அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் , மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு உடன் கரும்பும் சேர்த்து வழங்க கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கரும்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் ஆறடிக்கும் குறைவான கரும்புகளை வாங்க மறுப்பதாக விவசாயிகள் கவலைப்படுவதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 742 ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலையில் அங்கு 40 ஏக்கர் கரும்பே போதுமானதாக இருக்கும் என அறிவித்து மாவட்ட நிர்வாகம் கரும்பு கொள்முதல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அங்கு திம்ம ராவுத்தன் பகுதியில் கரும்பு கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆறடிக்கும் குறைவான கரும்புகளை வாங்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கலெக்டரின் உத்தரவை கேட்ட அதிகாரிகள் இன்ச் டேப் கொண்டு ஆறடி உள்ள கரும்புகளை மட்டும் அளந்தனர். ஆறு அடிக்கு மேல் உள்ள கரும்புகளை மட்டும் கொள்முதல் செய்வதற்கு கையெழுத்து போட்டனர். இதனை கண்டு கலக்கம் அடைந்த விவசாயிகள் ஒரு கரும்பு உயரமாக வளர்வதும் தாழ்வாக வளர்வதும் எங்கள் கையில் இல்லை.ஒரு வயலில் உள்ள எல்லா கரும்புகளையும் வாங்கினால் தான் எங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.