கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

0
113

 

 

கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் அராஜகம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

 

 

கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் அவர், தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களின் போது, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்வேலி 3வது நிலக்கரி சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

ஆனால், கத்தாழை, கரிவெட்டி, வீரமுடையாநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மூன்றாவது சுரங்கத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

 

 

பல இடங்களில் காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதைக் கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

 

 

இச்சம்பவத்திற்கு, கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கிராம சபைகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது என்றும் இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்; ஆனால், அதை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது; அதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், அதே தன்னாட்சி அதிகாரத்தை கிராமசபைகளுக்கு வழங்க மறுப்பதும், உரிமைக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களுக்கு எதிராக காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும் எந்த வகையில் நியாயம்? இது என்ன வகையான ஜனநாயகம்? என்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த கிராம சபைகளில் எல்லாம் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் மீண்டும் கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த அரசு ஆணையிட எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கூட்டங்களில் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் முன்மொழியும் தீர்மானங்களை மக்கள் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Previous articleகட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!
Next articleஇனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!