எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது முன்னோர்களிடமிருந்தே நமக்கு வந்தது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. நமது வாழ்க்கை முறையில் நோயானது வந்த பிறகு நம்மை காத்துக் கொள்வதை தான் தற்போதைய அறிவியல் கூறுகிறது அதனை தான் டிசிஸ் மேனேஜ்மென்ட் என்று கூறுகிறோம். ஆனால் நமது முன்னோர்கள் நோய் வருவதற்கு முன்னே நம்மை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறியுள்ளனர் அதனை தான் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்றும் கூறுகிறோம். இவ்வாறு நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது தான் எண்ணெய் குளியல்.
நமது உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைவது நமது உடலின் சூடு தன்மையை தான். நமது உடல் சூட்டினை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகவும் போகக்கூடாது குறைவாகவும் போகக்கூடாது.
நமது உடல் சூட்டினை குறைக்கக்கூடிய தன்மை எண்ணெய் குளியலுக்கு உள்ளது. உடலுக்கு மிகுந்த அழகையும், முகத்திற்கு நல்ல பொலிவையும் ஏற்படுத்தும். உடல் சோர்வை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கும். சரும நோய்களிலிருந்தும் நம்மை காப்பாற்றும். தலையில் ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் நீக்கி கூந்தலை செழுமையாக வளர செய்கிறது. உடல் சூடு சரியாக இருப்பவர்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாது.
இத்தனை நன்மைகளை தரக்கூடிய எண்ணெய் குளியலை சூரிய உதயத்தின் போது எடுத்துக் கொள்வது நல்லது. நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். வேறு எந்த எண்ணையும் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் குளியலை முடித்த பின்னரே காலை உணவை உண்ண வேண்டும்.
எண்ணெய் தேய்த்து ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து சீவக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள் இந்த எண்ணெய் குளியலை எடுக்கக் கூடாது. அதேபோன்று மழைக்காலங்களிலோ , குளிர்காலங்களிலோ எண்ணெய் குளியலை எடுக்கக் கூடாது.
குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக துவட்டி விட வேண்டும். அதேபோன்று அந்த நாள் முழுவதும் குளிர்ச்சியான பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. வெயிலில் சென்று அதிக கடின உழைப்பையும் செய்யக்கூடாது. இல்லற வாழ்க்கையிலும் ஈடுபடக் கூடாது.
அமாவாசை, பௌர்ணமி, விரத நாட்களில் இந்த எண்ணெய் குளியலை செய்யக்கூடாது. கோவில் திருவிழா நாட்களிலும், நம் குடும்பத்தில் யாரேனும் வெளியூர் செல்கிறார்கள் என்றாலோ அல்லது நாம் வெளியூர் செல்கிறோம் என்றாலும் குளிக்க கூடாது. நாம் பிறந்த நட்சத்திரம் வருகின்ற நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் குளிக்க கூடாது.
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். தீபாவளி நாளன்றும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.