பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
வாகனங்கள் அனைத்திற்கும், வாழ்நாள் காலம், அதாவது ஃபிட்னஸ் சர்டிபிகேட் இருக்கும். தனி பயன்பாட்டு வாகனங்கள் 15 ஆண்டுகளும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 10 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கினால், அந்த வாகனத்தை இயக்கலாம்.
ஆனால், மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, ஃபிட்னஸ் சர்டிபிகேட் முடிந்ததும், அந்த வாகனங்களை அழித்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழைய தொழில்நுட்பம் அழிந்து புதிய தொழில்நுட்பம் வளர்வதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பை குறையும், பாதுகாப்பு அதிகரிக்கும் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்சில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பழைய வாகனங்கள் ஒழிப்பு கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் மூலம், சாலை போக்குவரத்தில் பயனம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு இளைஞர்கள் பெரும் ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பழைய வாகனங்களை அழிப்பதற்கு கொடுத்து சர்டிபிகேட் பெற்றுக் கொள்வோருக்கு, புதிய வாகனங்களை வாங்கும் போது பதிவுக் கட்டணம் கட்டத் தேவையில்லை. சாலை வரிகளிலும் சலுகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது குறைக்கப்படும். கடந்த ஆண்டு வாகன உற்பத்திக்காக 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய உருக்குகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தால், உருக்கு இறக்குமதி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.