மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை
ஓமலூர் அருகே தாரமங்கலம் ஒன்றிய குட்கிரமத்தை சேர்ந்த மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள மாற்றுதிறன் பெண் ஓவியத்தில் சாதனை படைத்து வருகிறார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தாய் தந்தையும், கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் ஒன்றியத்தில் தெசவிளக்கு கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் கந்தசாமி சின்னபொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மலர்விழி, சுசீலா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில், மூத்த பெண்ணிற்கு 30 வயதும், இளைய பெண்ணுக்கு 28 வயதும் ஆகிறது. ஆனால், இவர்கள் இருவருமே ஐந்து வயது குழந்தையின் வளர்ச்சி அளவிற்கே வளர்ந்துள்ளனர். இரண்டு பெண் பிள்ளைகளும் வளர்ச்சி குன்றியுள்ளனர்.
இருவரும் அதிகபட்சம் மூன்று அடி உயரத்திற்கு மட்டுமே வளர்ந்துள்ளனர். இதில், இளைய பெண் சுசீலாவால் நடக்கவும் முடியாது. அமர்ந்தபடியே தான் தனது அனைத்து பணிகளை செய்கிறார். கந்தசாமி நெசவு தொழிலாளி என்றாலும், இரண்டு பெண் பிள்ளைகளையும் பாசமுடன் வளர்த்து வருகிறார்.
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளும் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். இந்த நிலையில், இளைய மகள் சுசீலா ஓவியம் வரைவதில் சிறந்த திறமையாளராக உள்ளார்.
இதுவரை 250-க்கும் மேற்பட்ட அற்புதமான ஓவியங்களை சுசீலா வரைந்து அசத்தியுள்ளார். பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வகுப்பறையில் ஆசிரியர் வரைந்த ஓவியத்தை, இவர் தனது வகுப்பறையில் வரைந்து ஆசிரியர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவர்க்கு ஆசிரியர்கள் ஓவியம் வரைவதற்கான பயிற்சிகளை அளித்துள்ளனர்.
இதில், சுசீலா சிறந்த திறமையாளராக உயர்ந்தார். எந்த ஓவியத்தை வரைய கூறினாலும் அரை மணி நேரத்தில் அற்புதமாக வரைந்து அசத்துகிறார். மேலும், சென்னை, பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் அவரது ஓவியங்களை காட்சிப்படுத்தி பரிசுகளை பெற்றுள்ளார். பெங்களூரில் பதக்கம் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார்.
ஆனால், இவரது ஓவிய திறன் இதுவரை முழுமையாக வெளி உலகிற்கு தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்காமல், இவரது ஓவிய திறமை அனைத்தும் அவரது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறது. நூற்றுக்கும் மேற்ப்பட்ட கேன்வாஸ் ஓவியங்களை வரைந்து வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.
மேலும், தான் வரைந்த ஓவியங்களை புத்தக வடிவில் கோர்த்து பாதுகாத்து வருகிறார். இவரது ஓவியங்களை பார்ப்பதற்காக வருபவர்களுக்கு, தனது வீட்டில் போதிய இடவசதி இல்லை என்பதால் பக்கத்து வீட்டில் அடுக்கி வைத்து காட்சிப்படுத்தி காண்பித்து வருகின்றனர். மேலும், சுசீலா ஒரு மலர் ஓவியத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்து காட்டி அசத்துகிறார்.
மூன்று அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ள 28 வயதான சுசீலா, நடக்கவும் முடியாத நிலையில், அமர்ந்தபடியே பெற்றோர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழக அரசு போதுமான உதவிகளை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவரது திறமையின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணி வழங்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும், அரசு சார்பில் இவருக்கு ஓவிய பயிற்சி அளித்து தேவையான உதவிகளை செய்தால், உலக அளவில் ஓவியத்தில் சாதனைகளை படைப்பார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இரண்டு மாற்றுதிறன் குழந்தைகளின் தாய் தந்தை கூறும் போது எங்கள் காலம் வரை இவர்களை சந்தோசமாக பார்த்துகொள்வோம், அவர்களுக்காகவே எங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளோம்.
அவர்களின் அனைத்து ஆசைகளையும் எங்களால் முடிந்த வரை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், எங்கள் காலத்திற்கு பிறகு அவர்கள் சுயமாக வாழும் வகையில் தமிழக அரசு எதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.