உலக நாடுகளை புரட்டி போட்ட ஓமைக்ரான்! இதுவரை 60 பேருக்கு தொற்று! பதற்றத்தில் மோடி!
தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்து புதிய வீரிய மிக்க ஓமைக்ரான் என்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக அனைத்து தடுப்பூசியின் செயல்திறன் மிகவும் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பும் இந்த கொரோனாவின் நிலையை கவலைக்குரிய திரிபாக சொல்லியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. இதுவரை அங்கு 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த வைரஸ் அச்சத்தின் காரணமாக பல உலக நாடுகளும் அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதே போன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது விமானங்களை தடை செய்வது குறித்து ஆலோசித்தும் வருகிறது.
இந்த நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் உலக நாடுகளில் பரவும் தற்போதைய புதிய கொரோனா நிலவரம் குறித்தும், எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்பது குறித்தும் பிரதமர் மோடியிடம் அதற்குரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரனா குறித்தும், அந்த நோய் தீவிரம் மற்றும் அதனால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவை பற்றியும், அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கியுள்ளதாக அவரது அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது புதிய வகை கொரோனா பரவுவதன் காரணமாகவும், அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுடன் பேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களும் இது குறித்து கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்கான அவசியத்தையும் எடுத்துக் கூறியுள்ளார்கள். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்றுவது குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சர்வதேச நாடுகளிடம் இருந்து நம் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளையும் மிகத் தீவிரமாக கண்காணிக்கவும் மற்றும் ஆபத்து அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், அதிகாரிகளிடம் எடுத்துரைத்த பிரதமர் மோடி சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கும் திட்டங்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாக பிரதமர் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.