ஈக்விடார் நாட்டில் மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை… ஈக்விடாரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்விடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மேலும் ஒரு அரசியல் தலைவர் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்வசென்சியோ அவர்கள் பிரச்சாரத்தை முடித்துக் கெண்டு காரில் ஏறச் சென்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வேட்பாளர் பெர்னாண்டோ வில்வசென்சியோ அவர்களை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த வேட்பாளர் பெர்னாண்டோ வில்வசென்சியோ அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து மேலும் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈக்விடார் நாட்டின் முன்னாள் அதிபர் ரபேல் கொரியா அவர்களின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவர் பெட்ரோ பிரையோன்ஸ் அவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
பெட்ரோ பிரையோன்ஸ் அவர்கள் சான்மேடியோ நகரில் உள்ள வீட்டில் இருந்த பொழுது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியை எடுத்து பெட்ரோ பிரையோன்ஸ் அவர்களை சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த பெட்ரோ பிரையோன்ஸ் அவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்விடார் நாட்டில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மற்ற அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.