“ஒரே நாடு – ஒரே ரேஷன்” இன்று முதல் அமல்!!

0
212

தமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ரேஷன் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும்.

தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை, தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15ம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ்,
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து இன்று தொடங்கி வைக்கிறார். இந்திய நாட்டில் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5% பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் முழுமையாக பயன்பெறுவார்கள் என்று கூறினார்.

Previous articleஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!
Next article“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here