ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!!

ஒன் ஸ்மைல்  பிளீஸ்!! நிலவு மற்றும் பூமியுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா!! 

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -1 விண்கலம் தற்போது புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 என்ற விண்கலத்தை இந்தியா அனுப்பி, தற்போது வெற்றிகரமாக அதன் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் செயல்பட்டு வருகிறது.

அதன் பரபரப்பு அடங்குவதற்குள் சூரியன் மற்றும் சூரிய புயல்கள் குறித்துஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஆதித்யா எல்- 1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி.ச. 57 என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

ஆதித்யா எல்- 1 விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்து, அதன் பின்னர் புவி வட்டபாதையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. தற்போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக  இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

பின்னர் சூரியனின் L-1 சுற்றுவட்ட பாதையை அடைந்து சூரிய புயல், ஈர்ப்பு விசை, மற்றும் கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது. சூரியனின் வெளிப்புற பகுதி சோலார் கொரோனா என்பதை ஆதித்யா,எல்- 1 ஆய்வு செய்ய உள்ளது. அத்துடன் சூரிய கதிர்களையும் இது ஆய்வு செய்யும். சந்திரயான் 3 விண்கலத்தில் ரோவர் மற்றும் லேண்டர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல் -1 சூரியனின் இறங்காது. அதற்கு பதிலாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து அகலாமல், அணுகாமல் தூரத்தில் இருந்து சுற்றி வந்து ஆய்வு செய்யும்.

இதையடுத்து புவி வட்ட பாதையில் சுற்றி வரும் ஆதித்யா எல் -1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் விண்கலத்தில் உள்ள.VELC & SUIT கருவிகளின் புகைப்படம். நிலா, மற்றும் பூமியின் புகைப்படம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து  இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரியனை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வரும் ஆதித்யா எல் -1 விண்கலம், நிலா மற்றும் பூமியை செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளது.