வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

Photo of author

By CineDesk

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

தொடர்மழை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர்.

வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

உடன்குடியில் டிசம்பர் 8ம் தேதி திருமண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அங்கு மதிய உணவுக்காக சமையல் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த திருமண வீட்டின் உறவினரான முதியவர் ஒருவர் சமையல் பணிகளை கண்காணிப்பது போன்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் துணிப்பையில் வெங்காயத்தை திருடி விட்டு, அங்கிருந்து நழுவ முயன்றார். இதை பார்த்த சமையல்காரர் இது குறித்து திருமண வீட்டாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த முதியவரிடம் துணிப்பையில் இருந்த வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த முதியவர் அங்கிருந்து சென்று விட்டார்.