வேலை வாங்கி தருவதாக 600 பெண்களை ஆபாசமாக படமெடுத்த சென்னை வாலிபர்
தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை வாங்கியதாக சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வேலை தேடும் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம், தனக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை மயக்கி நிர்வாணப் புகைப்படங்களை பெற்றதாக சென்னையைச் சேர்ந்த ஆண் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து பல மாத தீவிர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான சாப்ட்வேர் எஞ்சினியர் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தான் இந்த க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப் என்பவர். இவரது மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவிக்கு பகல் நேரத்தில் வேலை, செழியனுக்கு இரவு நேரத்தில் வேலை. இதனால், பகல் நேரத்தில் இவருக்கு பொழுது போகாததால், செழியன் போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணியாற்ற பெண்கள் தேவை என்று தன்னுடைய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் செழியன் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல பெண்கள் அவரை வேலைக்காக தொடர்பு கொண்டுள்ளனர். இதன் மூலமாக அவர்களின் போன் நம்பரைப் பெற்று பிரதீப் என்ற பெயரில் செழியன், நேர்காணல் செய்துள்ளார்.
பின்னர், அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெண் HR தங்களிடம் பேசுவார் என்று கூறி, மேலும் வேலை உறுதியாகக் கிடைக்கும், ஆனால் அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நம்பிக்கை தரும் விதமாக பேசிய இந்த செழியன் பேச்சை அந்தப் பெண்களும் நம்பியுள்ளனர். அதன் பிறகு, அந்தப் பெண்களை தொடர்பு கொண்டு பேசி மயக்கி, வேலை உறுதியாக கிடைக்கும் நல்ல சம்பளம் என்று வார்த்தைகளில் ஆசையை தூண்டி, அவர்களிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுள்ளார். இவ்வாறு நம்பிக்கை தரும் வகையில் பேசிய செழியனின் பேச்சில் மயங்கிய பெண்களும் அவர்களது புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, அடுத்தகட்டமாக நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என கூறி பயமுறுத்தி அவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்லாது இதற்காக அவர்களிடமிருந்து பணமும் பெற்றுள்ளார். இப்படி அவர் 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களிடம் பேசி ஏமாற்றி நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். அவரிடம் சிக்கியவர்களில் ஒரு சிலரே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தமிழ் பெண்களிடம் இப்படி பேசினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழக பெண்களை செழியன் பெரும்பாலும் தேர்வு செய்யவில்லை. இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அனைத்து உண்மைகளும் தற்பொழுது வெளியே வந்துள்ளது.
கடந்த ஓராண்டாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டு வந்து தற்போது சிக்கிய இந்த செழியனிடமிருந்து 2 செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த செல்போன்களை தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், செழியனிடம் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.