கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் நாணயங்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் ஆரம்பம் முதலே நல்ல நட்பில் இருந்து வருபவர் ஓ பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவுபடக்கூடாது என்று பாஜக ஆரம்பம் முதலே நினைத்தது. அந்த நேரத்தில் மோடி, அமித்ஷா போன்றோர் எத்தனையோ முறை தலையிட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். இருந்தும் அதிமுக இரண்டாக பிளந்துவிட்டது. தன்னுடைய பலம் என்ன என்று நிரூபிக்க ஓபிஎஸ் இப்படி செய்தபோதிலும் அவருக்கு துணையாக யாரும் நிற்கவில்லை.
பின்னர் பலமுறை மீண்டும் அதிமுகவுடன் சேர்ந்துவிடலாம் என்று அவர் நினைத்தபோது எடப்பாடி அவரை நெருங்கவிடவில்லை. சரி மோடிஜியை சந்தித்து பேசலாம் என்று நினைத்து பிரதமர் மோடி தற்போது தமிழ்நாடு வந்தபோது மோடிஜியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடியுடன் இணக்கமாக இருப்பதால் ஓபிஎஸ்ஸை சந்தித்தால் எடப்பாடியுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்து பாஜகவினர் ஓபிஎஸ் சந்திப்பு பற்றி பிரதமரிடம் சொல்லவில்லை.
பிரதமரை எப்படியும் சந்தித்து விடலாம் என்ற கனவில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். மாணவர்களின் படிப்பு விஷயத்தில் மத்திய அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்பு விசயத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள் என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். இதனால் பாஜக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.