கட்டளையிட்ட அதிமுக தலைமை! தயாரான அதிமுக தொண்டர்கள்!

Photo of author

By Sakthi

வாக்களித்த மக்களின் நலனைப் பற்றி சிந்திக்காமல், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுகவை கண்டித்து இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய வீடுகளின் முன்பு பதாகைகள் ஏந்தி இன்றைய தினம் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்களாக இருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலின்போது திமுகவின் தலைவர் ஸ்டாலினும். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அதோடு பெட்ரோல், டீசல் விலை ஐந்து ரூபாய் குறைக்கப்படும் அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும், என திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நற்செயல் அதுதான் அரசியல் நாகரிகமும் கூட என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மக்களுக்கு தேர்வின்போது அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் மறந்துவிட்டு அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கை தொடுத்து கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறது. அதிமுக என்ற கட்சியை நிர்மூலமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது நிறைவேறாது. தமிழக மக்களின் நலம் காத்திடவும் தமிழக பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு இருக்கவும், மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவர அதிமுக முயற்சி செய்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

அதோடு திமுக அரசின் மெத்தன போக்கையும், மக்கள் நலனின் மீது அக்கறையின்மையையும் கண்டித்து இன்றைய தினம் காலை 10 மணி அளவில் கழகத்தின் உடன்பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தங்களுடைய இல்லங்களில் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழக மக்களின் உரிமைகுரல் ஆக ஒழித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதிமுகவின் தலைமை தெரிவித்திருக்கிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணி அளவில் அதிமுகவினர் எல்லோரும் அவர்களுடைய இல்லங்களுக்கு முன்பாக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தன்னுடைய சொந்த மாவட்டமான தேனி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்திலும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.