முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்! காரணம் இதுதான்!

Photo of author

By Sakthi

நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களிலும் மற்றும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை அவர்களுடைய 18 வயது பூர்த்தியான பின்னர் பெற்றுக்கொள்ளலாம் 18 வயது பூர்த்தி ஆகும் சமயத்தில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை மாற்றி தொகையுடன் சேர்த்து கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளின் தாய் அல்லது தந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.


இந்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பிற்கு முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற வலைதள பதிவில் நோய் தொற்று காரணமாக, பெற்றோர்களை இழந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28 5 2021 அன்று அறிக்கையின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பினை 29 5 2021 ஆண்டு வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்