அதிமுக பொதுக்குழு விவகாரம்! ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Photo of author

By Sakthi

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2ம் தேதி ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதாவது அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க இயலாது.

இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தனி நீதிபதியை தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே எடப்பாடி பழனிச்சாமி சார்பாக வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தால் தங்களுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.