கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி?
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது கேரளா மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரம் அடைந்துள்ளது. கேரளா மாநிலத்தில் இதுவரை பெய்த கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று(மே25) முதல் வரும் மே 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது