சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் கேரளா கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவை நாகை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஆகும். மேலும் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை , தென்காசி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 21.11.2024 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் விளைவாக வருகிற 23 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என தெரிவித்துள்ளது.